ஆதி உண்டு அந்தம் இல்லை

தமிழர்களும், பிறமொழியாளர்களும் ஏன் தமிழ்பயில வேண்டுமென்பதற்குச் சில உறுதிப்பொருள்கள் உரைக்கலாம். சுமேரிய, எகிப்திய, இலத்தீன், கிரேக்க, ஐரோப்பிய, ஆரிய நாகரிகங்களுக்கிணையான அல்லது சற்றே மேம்பட்ட திராவிட நாகரிகம் தெளிவதற்கும், மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட மூதாதையரோடு உரையாடுதற்கும், இந்த பூமியின் பழைய காற்றையும் வெப்பத்தையும் உள்ளும் புறமும் உணர்வதற்கும், கருத்துக்கருவியாகிய மொழியை ஓர் இனம் கலைக்கருவியாக்கிய கலாசாரம் காண்பதற்கும், ஒரு தென்னாட்டு இனக்குழு கிறித்துவுக்கு முன்பே உலகப்பண்பாட்டுக்கு அள்ளிக்கொடுத்த அறிவுக்கொடை துய்ப்பதற்கும், மனித குலத்தின் பண்பாட்டுத் தொடர்ச்சியை நம் தொப்புள் பள்ளம் உணர்வதற்கும், அந்தப் பெருமிதத்தில் நிகழ்காலம் நிமிர்வதற்கும் எதிர்காலம் நிலைப்பதற்கும் ஒரு மாந்தன் தமிழ் கற்கலாம்.